ஹைதராபாத் குண்டு வெடிப்பும் - முஸ்லிம்களுக்கு எதிரான தமிழக பத்திரிகைகளின் சதியும்!


ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் குண்டு வெடித்து 17 பேர் பலியாயினர். இந்த குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் யார்? என புலனாய்வு செய்து கண்டு பிடிப்பதற்கு பதிலாக எடுத்த எடுப்பில் முஸ்லிம்கள்தான் இதைச் செய்தனர் என்று முடிவு செய்துவிட்ட போலீசாரும், ஊடகங்களும் இது சம்பந்தமான பெய்ச் செய்திகளை கசிய விட்ட வண்ணம் உள்ளனர். கோவையில் இருந்து கேரளா நோக்கி மினி லாரி ஒன்று சென்றதாம்! அந்த லாரியில் 5 டன் அம்மோனியம் நைட்ரேட் இருந்ததாம்! அந்த மினி லாரியை கேரள மாநில மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல்கரிம் என்பவர் ஓட்டிச் சென்றாராம்! இந்த லாரியை மடக்கிப் பிடித்த போலீசார் கோவை - கேரளாவைத் தகர்க்கும் சதித் திட்டத்தில் இந்த வெடி மருந்துகள் கடத்தப்பட்டதா? என்பது குறித்து கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என 25-02-13 அன்று தினத் தந்தி செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தி மூலம் ஹைதராபாத்தில் குண்டு வைத்தது முஸ்லிம்கள்தான் என பிற சமூக மக்களிடம் பதிய வைத்தாயிற்று.

ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கும், அப்துல் கரிமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை கேரள போலீசாரோ, என்.ஐ.ஏ.போலீசாரோ கைது செய்யுவும் இல்லை; விசாரிக்கவும் இல்லை என்ற உண்மையை தினத் தந்தி சொன்னதா? இல்லை.

ஹைதராபாத் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது ஆதம். சோமாலியா நாட்டைச் சேர்ந்த அப்துல்லா உம்ரன் மக்ரன் ஆகிய இருவர் பீகார் மாநிலத்தில் இருந்து நேபாள எல்லைக்குள் தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டதாக 25-02-13 அன்று செய்தி வெளியிட்ட தினத் தந்தி, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு லேப்டாப், பேனா, கேமரா செல், ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸ், ஐதராபாத்-செகந்ராபாத் நகர படங்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டது. இதன் மூலம் ஹைதராபாத் குண்டு வெடிப்பை முஸ்லிம்கள்தான் நடத்தினார்கள் என அப்பாவி மக்களை நம்ப வைத்தது தினத் தந்தி. தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள் அனைவரும் லேப்டாப், பேனா, கேமரா செல், டிரைவிங் லைசென்ஸ், ஊரின் வரை படங்கள் வைத்துள்ளனர். இவையெல்லாம் தீவிரவாதிகளின் ஆயுதங்கள் என்று யாராவது சொல்வார்களா? முஸ்லிம்களோடு சம்பந்தப்படுத்தி, இந்த பொருட்களும் தீவிரவாதிகளின் ஆயுதங்கள் என தினத்தந்தி காட்ட முயலுகிறது.

ஆந்திர மாநில பி.ஜே.பி.யின் தலைவராக கிரன் ரெட்டி என்பவர் இருக்கிறார். அவருக்கு ஒரு மர்மக் கடிதம் வந்ததாம்! அந்தக் கடிதத்தில் ‘ஹைதராபாத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது நாங்கள் தான். எங்களது அடுத்த தாக்குதல் ஹைதராபாத்தின் பேகம் பஜார் தான்’ என்று குறிப்பிட்டு இருந்ததாம். இந்த கடிதம் பி.ஜே.பி.யின் செட்டப் நாடகம் என இப்போது சிலர் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் மதுரை தினகரன் 25-02-13 அன்று இந்த கடிதத்தின் சாராம்சத்தை வெளியிட்டு குண்டு வெடிப்பு என்றால் முஸ்லிம்கள் என அப்பாவி மக்களின் மனதில் பதிய வைத்துவிட்டதே! இந்தப் பதிவை யார் அப்புறப்படுத்துவது?

ஹைதராபாத்தில் குண்டு வைத்த தீவிரவாதிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெடி பொருட்களுடன் நுழைந்து விட்டனர். அதனால் காவல்துறை சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது என்று அதே நாளின் முதல் பக்கத்தில் தினகரன் பத்திரிகை செய்தி வெளியிட்டு குமரி மாவட்ட முஸ்லிம்களை கதி கலங்க வைத்ததே! அந்த கலங்கத்தை யார் தான் போக்க முடியும்? கடைசியில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்யது மக்பூல், இம்ரான் கான், மற்றும் நெல்லூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு முஸ்லிம்கள்தான் ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கு காரணம் என்று 4-3-13 அன்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளதே! இதை எங்கு போய் சொல்வது?

ஜெயிலில் இருந்து இவர்கள் வெடிகுண்டு வெடிப்பை நடத்தினார்கள் எனில் இவர்களுக்கு ஜெயில் அதிகாரிகள் துணை புரிந்துள்ளார்கள் என்று அர்த்தமாகிறது. இந்த ஜெயில் அதிகாரிகளை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தினமலர் சொல்லுமா? சொல்லவே சொல்லாது. இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் அல்லவா தினமலர் அப்படிச் சொல்லும். அது பொய் என்று தினமலருக்கு நன்கு தெரியும் போது அது எப்படி இவ்வாறு சொல்லும்?

இவர்களின் நோக்கம் குண்டு வைத்த தீவிரவாதிகளை பிடிப்பதல்ல. மாறாக முஸ்லிம்கள் மீது குண்டு வெடிப்பு பழியை தூக்கிப் போட வேண்டும். குண்டு வைத்த உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என்பதே! இதுதான் இவர்களின் நோக்கம் எனும் போது பத்திரிகை தர்மம் எப்படி காக்கப்படும்? இந்தியா எப்படி உருப்படும்? என்று ஒவ்வொரு இந்திய மக்களின் உள்ளத்திலும் கேள்வி எழத்தானே செய்யும்!
ஆன்லைன் பிஜே

No comments:

Post a Comment