Jihad - Sri Lakshmi Sankarasarya


ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்களின் - ஜிஹாத் விளக்கம்! அன்புள்ள சகோதர சகோதரிகளே! இங்கு நான் சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்துள்ளேன். 15 வருடங்களுக்கு முன்பு குர்ஆனை படித்துள்ளேன். பத்திரிக்கையிலும், நண்பர்கள் மூலமாகவும் இஸ்லாத்தைப் பற்றியும் முகமது நபியைப் பற்றியும் பல தவறான கருத்துகள் என்க்குள் விதைக்கப்பட்டிருந்தது. இந்த மக்களும், பத்திரிக்கைகளும் குர்ஆனைப் பற்றி சொல்வது உண்மைதானா என்பதை தெரிந்து கொள்வதற்காக நான் குர்ஆனை ஆராய ஆரம்பித்தேன். கிராமத்தில் சொல்லப்படும் பழமொழி ஒன்றைப் போல் குர்ஆனில் உள்ள நல்ல விஷயங்களை படிப்பதை விட்டு விட்டு அதிலிருந்து என்ன தவறுகளை உண்டாக்கலாம் என்று சிநதிக்க ஆரம்பித்தேன். சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளும், குர்ஆனின் சில வசனங்களும் எதிர்மறையாக என்னை ஒரு புத்தகம் எழுதத் தூண்டியது. அதன் தலைப்பு "THE HISTORY OF ISLAMIC TERRORISM". ஆனால் நான் எழுதியவை அனைத்தும் தவறு என்று பின்னாளில் உணர்ந்து கொண்டேன். இந்து மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்துக்கு மறு பெயர் ஜிஹாத் என்றும், ஜிஹாத் என்பது தீவிரவாதம் என்றும் புரிந்து வைத்துள்ளனர். நான் புரிந்து கொண்ட வகையில் இஸ்லாம் என்றால் என்ன என்பது பற்றியும், ஜிஹாத் என்றால் என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ள மஹா பாரத காலத்துக்கு நாம் செல்ல வேண்டும். கௌரவர்கள், பாண்டவர்கள், துரியோதனன், அர்ஜூனன் கதைகள் எல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும். "அர்ஜூனா, இந்த சிக்கலான நேரத்தில் இக்களங்கம் எங்கிருந்து உனக்கு வந்தது; பண்புடையவனுக்கு இது தகாதது; மேலுலகுக்கும் வழிகாட்டாதது; இகவாழ்விலோ இழிவைத் தருவது. இது போன்ற தளர்ச்சிக்கு இடம் தராதே. இது உனக்கு ஏற்றதல்ல. இதய பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில்." பகவத் கீதை அத்தியாயம் 2 ல் வரும் வசனங்களே இவை. அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் எதிராக நடக்கும் ஒரு யுத்தம் யுத்தம் அல்ல அது தர்ம யுத்தம் என்கிறது இந்து மத வேதங்கள். அங்கு போரிடுவதற்கோ தயவு தாட்சண்யம் பார்ப்பதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை என்கிறது கீதை. இந்த யுத்தத்தில் தோற்றாலும் நீ சொர்க்கம் செல்வாய் என்று உபதேசிக்கப்படுகிறது. இதே போன்றுதான் மெக்கா நகரில் அந்த மக்களின் குடி விபசாரம், சிலை வணக்கம், வட்டி, பெண் கொடுமை, பெண் குழந்தைகளை கொல்லுதல் போன்ற செயல்களை விமரிசித்து 'ஒரே இறைவனை வணங்குங்கள்' என்று உபதேசித்தார் நபிகள் நாயகம். உடனே அங்கிருந்த குரைஷிகள் இவரையும் இவரது ஆதரவாளர்களையும எதிரிகளாக பாவிக்க தொடங்கினர். பலரை கொலை செய்தனர். அவர்களின் பொருட்களை கொள்ளையடித்தனர். ஊர் விலக்கம் செய்தனர். இவர்கள் செய்த கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி மதினாவை நோக்கி செல்கிறார் நபிகள். அதே குரைஷி கூட்டம் அங்கும் முஸ்லிம்களை பின் தொடர்ந்து வருகிறது. முஸ்லிம்களை அழிக்கப் பார்க்கிறது. ஒரு வருடம் அல்லது இரு வருடம் அல்ல. 13 வருடங்கள் இது போன்ற கொடுமைகளை முகமது நபியும் அவரது தோழர்களும் அனுபவிக்கின்றனர். இவ்வளவு கொடுமைகள் தினம் தினம் நடந்தும் தனது தோழர்களிடம் 'பொறுமையாக இருங்கள். பொறுமையாளர்களோடு நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான்' என்று அமைதியாக உபதேசித்தார். மக்கா குரைஷிகளின் அக்கிரமங்கள் உச்ச கட்டத்தை அடைந்த போதுதான் தங்களை தற்காத்து கொள்ள எதிர்த்து போரிடுகிறார்கள் முஸ்லிம்கள். மதினாவில் பயந்து தஞ்சம் அடைந்த முஸ்லிம்களை கொல்வதற்காக படை திரட்டிக் கொண்டு மக்காவிலிருந்து மதினா நோக்கி குரைஷிகளின் படை வருகிறது. பகவத் கீதையில் எந்த சூழலை நாம் பார்ததோமோ அதே சூழல்தான் இங்கு முஸ்லிம்களுக்கும் உள்ளது. இதுதான் இஸ்லாத்தில் ஜிஹாதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீவிரவாதம் என்று பெயரிடுவீர்களா? தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள ஒருவன் எடுக்கும் தற்காப்பு முயற்சிக்கு தீவிரவாதம் என்ற சொல் சரியாகுமா? பகவத் கீதையில் வரும் சம்பவங்களை நியாயப்படுத்தும் பலர் இஸ்லாமியர்களின் தற்காப்பு போர்களை விமரிசிப்பது ஏன்? நமது நாட்டில் தங்களை வளர்த்துக் கொள்ள சிலர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் நிரந்தரமாக பிரித்து வைக்க முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லி தங்களை வளமாக்கி கொள்கின்றனர். ஜிஹாதுக்கு தவறான விளக்கத்தை கொடுத்து இந்துக்களை பிரிக்க பார்க்கின்றனர். . .

No comments:

Post a Comment