பாபர் மசூதி இடிப்பும் இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறையும்

 

இந்தியாவின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும்,அடுத்த சில நொடிகளில் தாடி வைத்த ஒரு முகம் சிவப்பு வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு, தலைப்புச் செய்திகளில் மீண்டும், மீண்டும் பெரிதாக்கிக் காட்டப்படும். இவர் இந்தியன் முஜாஹிதினைச் சேர்ந்தவர். இவர் தான் அந்த குண்டு வெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று பரபரப்பாக, எடிட் செய்யப்பட்ட கொட்டை எழுத்துகளில், ஊடகங்களில் பிரைம் டைம் செய்திகளாக‌ வெளியாகி கொண்டிருக்கும். கவனமாக பக்கத்தில் ஒரு கேள்விக்குறி போட்டப்பட்டிருக்கும்.. வேறொன்றுமில்லை. ஊகிக்கிறார்களாம். குண்டு வெடித்த‌ இட‌த்திற்கு, மோப்ப‌ நாயே போய்ச் சேர்ந்திருக்காது, அதற்குள்ளாக குற்றவாளியை எப்படித் தான் கண்டுபிடிக்கின்றார்களோ !!



எளிதில் ச‌ந்தேகிக்க‌லாம். க‌ற்ப‌னைக்கெட்டிய‌வாறு ஊகிக்க‌லாம். நிரூபிக்க‌த் தேவையில்லை. எளிதில் கைது செய்ய‌லாம். இது தான் இஸ்லாமிய‌ர்க‌ள் மீது இந்திய‌ அர‌சும் ஊட‌க‌ங்க‌ளும் கொண்டுள்ள‌ நிலைப்பாடு. ஆஜ்மீர் த‌ர்கா, தானே, நாண்டெட், ம‌க்கா ம‌ஸ்ஜித் ஆகிய‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் குண்டு வெடிப்பு நட‌ந்த‌ போது, இப்ப‌டித் தான் ப‌ல‌ இஸ்லாமிய‌ இளைஞ‌ர்க‌ள் கைது செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர். பயங்கரவாதிகள் என்று அடையாள‌ப் ப‌டுத்த‌ப்ப‌ட்டு, ஊட‌க‌ங்க‌ள் முன் நிறுத்த‌ப்ப‌ட்ட‌ன‌ர். பிற‌கு அவ‌ர்க‌ள் குற்ற‌ம் நிரூபிக்க‌ப் ப‌டாம‌ல், அபின‌வ் பார‌த் என்று இந்துத்துவ‌ அமைப்பு, இக்குண்டு வெடிப்புக‌ளுக்கு பொறுப்பாக குற்ற‌ஞ்சாட்ட‌ப் ப‌ட்டு கைது செய்ய‌ப்ப‌ட்ட‌து. அடுத்துப் பெரிய அளவில் பேசப்பட்டது சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் வெடிப்புகள். 2008 நவம்பரில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் வழக்கம் போல லஷ்கர் ஏ தொய்பா, ஜைஷ் ஏ முகமத் குழுக்கள் தான் இதன் பின்னே உள்ளது என அரசு வழக்கம் போல பொய்யான அறிக்கைகளை விட்டது.ஆனால் விசாரணையில் மெல்ல அபிநவ் பாரத் என்கிற அமைப்பும் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி பிரசாத் சிரிகாந்த் புரோஹித் இருப்பதும் தெரியவந்தது. இதே பிரசாத் புரோஹித் தான் மாலேகாவ் குண்டு வெடிப்புகளுக்கு வெடி மருந்து உள்பட தொழில்நுட்ப உதவிகளையும் சாத்வி பிரக்ஞயா தாக்கூருக்கு வழங்கியவர். ச‌ங்க‌ ப‌ரிவார‌ங்க‌ளுட‌ன் இந்திய‌ இராணுவ‌ம்,உள‌வுத்துறை ஆகிய‌ அனைத்து அர‌சு எந்திர‌ங்க‌ளின் கூறுக‌ளும் இணைந்தே செய‌ல்ப‌டுகின்ற‌ன‌ர் என்ப‌த‌ற்கு இது ஒரு எளிய‌ உதார‌ண‌ம். இந்தக் குற்றங்களின் பின்னணியையும், பிரக்யா சிங் தாகூர் சுவாமி அசீமானந்தா உள்ளிட்ட இந்து சாமியார்களையும் அவர்களின் வலைப்பின்னலையும் கண்டு பிடித்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்திய, ஹேமந்த் கர்கரே என்ற காவல்துறை ஆணையர், 26/11 மும்பையில் பயங்கரவாத தாக்குதலினூடே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். காவி பயங்கரவாதத்தை தோலுரிக்காமல் விட மாட்டேன் என்ற சவாலுடன் கிளம்பிய கர்கரேவுக்கு சிவசேனை, சங்க பரிவார கும்பல்களால் தொடர் மிரட்டல் வந்திருக்கிறது என்பதை காங்கிரசு அமைச்சர் திக் விஜய்சிங்,கர்கரே தன்னுடன் பேசிய தொலைபேசி உரையாடல்களை கொண்டு உறுதி செய்திருக்கிறார். ஊடகங்களும் அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.




முஸ்லிம்கள் கைது செய்யப்படும் போது, பரபரப்பாக்கும் ஊடகங்கள், அவர்கள் விடுவிக்கப்படும் போதும் சங்க பரிவாரங்கள் கைது செய்யப்படும் போதும் அமைதியாக அச்செய்திகளை இருட்டடிப்பு செய்து விடுகின்றன. முஸ்லிம்கள் கைதாகும் போது தீவிரவாதி கைது செய்யப் பட்டான், அவன் இவன் என்று மிகக் கேவலமாக சித்தரிக்கும் அதே ஊடகங்கள், இந்து இளைஞர்கள் கைது, இந்தியன் முஜாஹிதினால் மூளைச் சலவை செய்யப்பட்டனரா? என்று பவ்யமாக பம்முவதையும் பார்க்கிறோம். இதற்கு நல்ல உதாரணம், வெகு சமீபத்தில் மோடி வருகையை ஒட்டி, வெடித்த பாட்னா குண்டுகள்.



போராடும் ம‌க்க‌ள் மீதோ, ஒரு இன‌த்தின் மீதோ ஒடுக்குமுறை செலுத்துவது என்று முடிவெடுத்து விட்டால், அரசு இயந்திரம் முத‌லில் செய்வ‌து க‌ருத்துருவாக்க‌ம். வெகும‌க்க‌ள் ம‌த்தியில் போராடுப‌வ‌ர்க‌ளின் ந‌ன் ம‌திப்பைச் சீர்குலைப்ப‌து, தீவிர‌வாதிக‌ள் என்று அடையாள‌ப் ப‌டுத்துவ‌து, அந்நிய‌ ஏஜென்டுக‌ள், அந்நிய‌ ச‌தி என்று முத்திரை குத்துவ‌து.மண்ணைக் காக்க‌ போராடும் விவசாயிக‌ள் அனைவ‌ரும் ந‌க்ச‌லைட்டுக‌ள், இயற்கை வளங்களை காக்கப் போராடும் ப‌ழ‌ங்குடியின‌ர் அனைவ‌ரும் மாவோயிஸ்ட்டுக‌ள், கூடங்குள அணு உலையை எதிர்த்து போராடும் மக்கள் அந்நிய நிதி பெறும் தேசத் துரோகிகள், இஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். இது தான் அரசு எந்திரங்கள் இடையறாது ஊடகங்களில் மேற்கொள்ளும் கருத்துருவாக்கத்தின் விளை பொருட்கள்.



'முஸ்லிம் தீவிரவாதம்' பற்றி மிக அதிகமாகப் பேசப் பட்டுவரும் நம் நாட்டில் இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்துப் பேசப்படுவதில்லை. 1992 ஆம் ஆண்டு திசம்பர் 6 ஆம் நாள் பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்ட நிகழ்வு இந்திய அரசமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கை என்பது நடைமுறையில் இல்லை என்பதை உலகில் அம்பலமாக்கிய ஒன்றாகும். மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் எல்லோரும் இந்து பெரும்பான்மைவாதத்திற்கும் இந்துத்துவ பாசிசத்திற்கும் எதிராகவும் போராட வேண்டிய கடமையை உணர்த்தி நிற்கும் நாள். மேலும், ’வளர்ச்சி’ என்ற பெயரில் பா.ஜ.க வை வரவேற்கும் போக்கு பெருகி வரும் இன்றைய சூழலில், இந்துத்துவ வெறி அரசியல் இது வரை இச்சமூகத்தில் விளைவித்த தீங்குகளை நினைவுப்படுத்த வேண்டிய தேவையும் அதிகமாகின்றது.

>

நிச்சயமாக இதில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும்இருக்கக் கூடும். மாற்றுக் கருத்துகளுக்கு இடையேயானப் போராட்டம் தான் கருத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றது. மாற்றுக் கருத்து இருப்பினும் இந்த கருத்தரங்கத்திற்கு வருமாறு சேவ் தமிழ்சு இயக்கம் சார்பாக அன்போடு அழைக்கிறோம். திறந்த மனதுடன் நேரில் விவாதிப்போம்.


Thanks Soruce: http://save-tamils.blogspot.in/2013/12/blog-post_5.html

2 comments:

  1. https://hyderoei.blogspot.com/2013/12/blog-post_6.html

    ReplyDelete
  2. https://hyderoei.blogspot.com/2013/12/blog-post_6.html

    ReplyDelete