கிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட உண்மைகள்
‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ – Christmas – என அழைக்கப்படும் ‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 அன்று பெரும்பாலான கிறிஸ்த்தவர்களால் கொண்டாடப்படுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7ம் நாள் கொண்டாடப்படுகின்றது.
பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுபூர்வமானதா? கிறிஸ்த்தவ நம்பிக்கையின்படி இறைமகனுக்கே(?) பிறந்தநாளா? என்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்குள் நுழையாமல் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படுவது சரிதானா?
வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ்…
கிறிஸ்மஸின் தோற்றம்
ஆரம்ப கால கிறிஸ்த்தவ சமுதாயத்தில் கிறிஸ்மஸ் உள்ளிட்ட எந்தவொரு பிறந்த நாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்படவில்லை. கிறிஸ்மஸ் நாள் மரபுவழி வருவதேயன்றி இயேசுவின் உண்மையான பிறந்தநாள் அல்ல. மேலும், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக் போன்ற அனுஸ்டானங்கள் புராதன பாபிலோனிலிய மக்களின் கலாசாரம் என என்சைக்ளோபீடியா -The world book Encyclopedia – The Encyclopedia of Religion and Ethics – the Encyclopedia Americana – கூறுகின்றது.
விக்கிபீடியா தருகின்ற தகவலின் அடிப்படையில், இத்தாலி போன்ற நாடுகளில் காணப்பட்ட ‘சட்டர்நாலியா’ (சடுர்நலியா பண்டிகை) – Saturnalia – மற்றும் உரோமர்களால் டிசம்பர் 25ல் கொண்டாடப்பட்டு வந்த வெற்றி வீரன் சூரியன் (Sol- Indicts) என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்தநாளான நட்டாலிஸ் சோலிஸ் இன்விக்ட்டி- Natalis Solis Invicti – (சோல் இன்விக்டுஸ்) என்கின்ற குளிர்கால பண்டிகைகளை தழுவியே கிறிஸ்மஸ் தோன்றியதாக கூறுகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில்,
• கிறிஸ்த்தவ எழுத்தாளர்கள் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள்உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதையும்,
• இயேசு சோல்-இன் சூரியக்கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளதையும்
• சிப்ரியன் – Cyprian- என்கின்ற கிறிஸ்த்தவ மதபோதகரின் “எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்…. கிறிஸ்த்துவும் பிறந்தது….” “ Oh ,how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born…” என்கின்ற வாக்குமூலத்தையும்,
• இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை முழுக்க முழுக்க உறுதிப்படுத்துகின்ற “சோல் இன்விக்டுஸ்- கிறிஸ்மஸின் தொடக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது” என்கின்ற கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் வாக்குமூலம்
போன்ற சான்றுகளை கோடிட்டு காட்டுவதன் மூலம், சூரியக் கடவுளின் பிறந்தநாள் உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்டங்களை அடிப்படையாக வைத்து மிகமிக பிற்பட்ட காலத்தில் தோன்றிய ஒரு பண்டிகையே கிறிஸ்மஸ் என்கின்ற கருத்தை உறுதி செய்கின்றது.
‘செக்டுஸ் ஜுலியஸ் அப்ரிகானுஸ்’ – Sextus Julius Africanus – என்கின்ற மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்த்தவ எழுத்தாளரால் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்து வரலாற்றில் முன் வைக்கப்படுகின்றது. இதற்கு ‘ஒரிஜென்’- Origen – போன்ற ஆரம்பகால முக்கிய கிறிஸ்த்தவ மதகுருக்களே மிக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். கிறிஸ்த்தவ இறையியல் அறிஞரான ஒரிஜென், “பார்வோன்- pharaoh – அரசனைப் போன்று இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என்றும், பாவிகளே அவ்வாறு செய்வதாகவும், புனிதர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்றும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டார்.
No comments:
Post a Comment