அதிக நேரம் செல்போனில் பேசினால் 400% மூளை கேன்சர்!அதிர்ச்சி தகவல்!!

செல்போனில் அதிக நேரம் பேசும் டீன் ஏஜ் பருவத்தினருக்கு மூளை கேன்சர் ஏற்படும் அபாயம் 400 சதவீதம் அதிகமாக இருப்பதாக மத்திய அரசின் ஆய்வுக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் மற்றும் செல்போன் டவர்களால் ஏற்படும் கதிரியக்க பாதிப்பு பற்றி ஆராய, மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் 8 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இதில் சுகாதாரத்துறை, பயோ டெக்னாலஜி துறை, தொலை தொடர்புத்துறை நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் பல அம்சங்கள் குறித்து ஆராய்ந்தனர்.

ரேடியோ அலைவரிசை விதிமுறைபடி (எஸ்.ஏ.ஆர்) தயாரிக்கப்படாத செல்போன்கள், அதிகளவு கதிரியக்கத்தை வெளியேற்றுகின்றன. எனவே இவற்றை தடை செய்ய வேண்டும் என நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் எஸ்.ஏ.ஆர் மதிப்பின் அளவு ஒரு கிலோவுக்கு 2 வாட் என்கிற விகிதத்தில் உள்ளது. அமெரிக்காவில் இந்த அளவு கிலோவுக்கு 1.6 மெகாவாட் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் செல்போன் டவர்கள் அமைக்க கூடாது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஆய்வுக்குழுவில் சுகாதாரத்துறை சார்பில் கலந்து கொண்ட விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கூறுகையில், ‘‘பல நிபுணர்கள் தாக்கல் செய்த தகவலின்படி இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இதை அடிப்படையாகக் கொண்டு டெலிபோன் டவர்களின் கதிரியக்க அளவு தொடர்பாக தேசிய கொள்கை வகுக்கப்படும். ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களை விட, இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் அதிக பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு இங்குள்ள வெப்பமான சூழல், உடல் எடை குறைவு, கொழுப்பு சத்து குறைவு போன்றவை காரணமாக இருக்கிறது. இதனால் கதிரியக்க அளவு விதிமுறைப்படி தயாரிக்கப்பட்ட செல்போன்களை மட்டுமே நமது நாட்டில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

செல்போனை நாம் பயன்படுத்தும்போது தலைப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கிறது. மூளைக்கு வரும் ரத்தம் இந்த வெப்பத்தை உடலின் மற்ற பகுதிகளிலும் பரவச் செய்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் டவரிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சால் தலைவலி, தூக்கமின்மை, மயக்கம், கவனக்குறைவு, காதில் இரைச்சல், ஞாபகசக்தி குறைவு, அஜுரணம், இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படுகிறது.

குழந்தைகள், டீன் ஏஜ் பருவத்தினர், கர்ப்பிணிகள் செல்போனை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. செல்போனை தலைப் பகுதிக்கு அருகே கொண்டு செல்லாமல், ‘ஹெட் போன்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சிறந்தது.மும்பை ஐ.ஐ.டி.யின் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் கிரிஷ் குமார் கூறுகையில், ‘‘செல்போனில் அதிகநேரம் பேசும் டீன்ஏஜ் பருவத்தினருக்கு, மூளை கேன்சர் வரும் அபாயம் 400 சதவீதம் அதிகம் உள்ளது. குழந்தைகளின் மெல்லிய மண்டை ஓட்டுக்குள் செல்போன்களின் மின்காந்த கதிரியக்கம் ஆழமாக ஊடுருவுகிறது” என்றார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், ‘‘செல்போன், டவர்களின் கதிரியக்கம் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுத்தும், உடம்பில் உள்ள செல்களின் பாதுகாப்பு தன்மையை பாதிக்கும். இதனால் உடல்நலத்துக்கு பல கேடுகள் ஏற்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்திருப்பதால், அதுதொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை பரிந்துரைப்பது குறித்து மத்திய தொலை தொடர்புத் துறை ஆலோசனையை தொடங்கியிருக்கிறது.

நன்றி.
தூத்துக்குடி ஆன்லைன்.

No comments:

Post a Comment