போலி' அரசியல் கட்சிகள்!



தேர்தல் ஆணையம் என்கிற அமைப்பு ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்பதும், அது சக்திவாய்ந்த அதிகாரம் படைத்த அரசியல் சட்ட அமைப்பு என்பதும் டி.என். சேஷன் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டபோதுதான் பெருவாரியான பொதுமக்களுக்கே தெரியவந்தது. வானளாவிய அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு உண்டு என்பதையும், ஆட்சியாளர்களின் கைப்பாவையாகத் தேர்தல் கமிஷன் செயல்பட வேண்டிய தேவையில்லை என்பதையும் டி.என். சேஷன் உணர்த்தியபோது, கட்சிப் பாகுபாடு இல்லாமல் அரசியல்வாதிகள் கைகோத்துத் தேர்தல் கமிஷனருக்குக் கடிவாளம் போடும் முயற்சியில் ஈடுபட்டனர். தேர்தல் கமிஷன் மூன்று பேர் கொண்ட குழுவாக்கப்பட்டு தலைமைத் தேர்தல் ஆணையர் என்கிற பதவியும் ஏற்படுத்தப்பட்டது.
டி.என். சேஷனுக்குப் பிறகு பதவி வகித்த தலைமைத் தேர்தல் ஆணையர்கள் அனைவருமே, ஏதாவது ஒருவிதத்தில் இந்தியத் தேர்தல் முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதுடன், முறையாகத் தேர்தல்கள் நடத்தப்படவும், தவறுகள் திருத்தப்படவும் தங்களது பங்களிப்பை நல்கி இருக்கிறார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை. காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட எம்.எஸ்.கில், லிங்டோ, நவீன் சாவ்லா போன்றவர்கள்கூட தலைமைத் தேர்தல் ஆணையர்களாகப் பணிபுரிந்தபோது தாங்கள் வகித்த பதவிக்குக் களங்கம் ஏற்பட்டுவிடாமல் பணியாற்றினர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷியும் இதற்கு விதிவிலக்கல்ல.
குரேஷி தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற பிறகு வெளிப்படுத்தி இருக்கும் பல கருத்துகள் பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. வாக்காளர்களின் வயது வரம்பைப் பதினாறாகக் குறைக்க வேண்டும் என்கிற அவரது கருத்தைத் தவிர, ஏனைய கருத்துகள் அனைத்துமே மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட்டு, தேர்தல் விதிகளில் தக்க மாற்றங்களை ஏற்படுத்த உதவுபவை.
2003-ல் இயற்றப்பட்ட ஒரு சட்டம் தனியார் நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 5%தொகையை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க வழிகோலியது. இந்த நன்கொடைகள் வங்கிக் காசோலைகள் மூலம் தரப்பட வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் ரூ. 20,000-க்கும் அதிகமாக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த நன்கொடைகள் முழுமையாக வரிவிலக்குப் பெறவும் வழிவகை செய்யப்பட்டது.
தங்களது பெயர் வெளியில் தெரியாமல், அரசியல் கட்சிகளுக்கு ரூ. 20,000-க்கும் அதிகமாக நன்கொடை வழங்க ஒரு நிறுவனம் விரும்பினால், தான் நன்கொடையாக வழங்கிய தொகைக்கு வரி விலக்குக் கோராமல் இருந்தாலே போதும். இதைத்தான் இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஊழலின் ஊற்றுக்கண் என்று சுட்டிக்காட்டித் திருத்தச் சொல்கிறார்.
ஏர்டெல் நிறுவனம் கடந்த 2008-09-ல் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 10 கோடி நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இது ஓர் உதாரணம் மட்டுமே. இதேபோல, பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி என்று எல்லா கட்சிகளுமே பெரிய தொழில் நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் நன்கொடைகளைப் பெற்றிருக்கின்றன. மத்திய அரசிலும், மாநில அரசுகளிலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் பெரிய தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமாகச்  சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நன்கொடைகளைப் பெறக்கூடும் என்பதுதான் இந்தச் சட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய பலவீனம்.
முந்தைய தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி கடந்த 2006 ஜூலை 31 அன்றே பிரதமருக்கு இந்த நன்கொடைகளின் பின்னணிகள் பற்றி சந்தேகம் இருப்பதாகக் கடிதம் எழுதியிருக்கிறார். அதை அடியொற்றி, இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி இந்தச் சட்டத்தில் இருக்கும் ஓட்டையைப் பயன்படுத்தி, வரி ஏய்ப்பு நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.
தேர்தல் அறக்கட்டளைகளை உருவாக்கி, இந்த அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படுவதற்கு மத்திய அரசு வழிகோலி இருக்கிறது. இதைப் பயன்படுத்தி மிகப்பெரிய வரி ஏய்ப்பு மோசடியே நடக்கிறது என்று குற்றம்சாட்டி இருக்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி.
சமீபகாலமாகத் தொழில் அதிபர்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் நடத்துவோர், சாராய அதிபர்கள் என்று பலரும் அரசியல் கட்சிகளைத் தொடங்குவதன் ரகசியமே, கணக்கு வழக்கில்லாமல் தங்களிடம் குவியும் பணத்துக்கு வரி விலக்குப் பெறுவதற்குத்தான். இந்தியாவில் இருக்கும், சுமார் 1,200 கட்சிகளில் 200 கட்சிகள் மட்டுமே, அதாவது 16% மட்டுமே, உண்மையாக முழுநேர அரசியலில் ஈடுபட்டிருப்பவை. ஏனைய கட்சிகள் அனைத்தும், அளவுக்கு அதிகமாகத் தாங்கள் சேர்க்கும் பணத்தை அரசியல் நன்கொடை என்கிற பெயரில் தங்களால் நடத்தப்படும் "செயல்படாத' அரசியல் கட்சிக்கு வாரி வழங்கி, அரசை ஏமாற்றுகின்றன என்று துணிந்து வெளிப்படுத்தி இருக்கிறார் குரேஷி.
இதுபோன்ற கட்சிகள் தாங்கள் நன்கொடையாகப் பெற்ற பணத்தை கட்சியின் பெயரில் இடங்களை வாங்குவது, நகைகள் வாங்குவது, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்று பயன்படுத்துவதாகவும் அதனால் இந்தக் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தலைமைத் தேர்தல் ஆணையரின் கருத்து. வருமானவரிச் சட்டத்தைப் "போலி' அரசியல் கட்சிகள் தவறாகப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டால், வருமான வரி விலக்குப் பெறுவதற்காகவே புதியதாகப் பல கட்சிகள் காளான்போல் உருவெடுக்கும் ஆபத்து இருப்பதைச் சரியான நேரத்தில் சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார் குரேஷி.
அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் அதிகாரம் மட்டும்தான் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலில் போட்டியிடாத "போலி' கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரமும் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, அரசியல் கட்சிகளின் கணக்கை ஆய்வு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கோ, தலைமைத் தணிக்கை ஆணையருக்கோ வழங்கப்பட வேண்டும். அதுதான் இதற்கு ஒரே தீர்வு!

No comments:

Post a Comment