நாடு போற போக்கு; இதிலுமா இலவசம்...?


வாக்குகளை வளைத்துப்போட வண்ணத் தொலைக்காட்சிப்  பெட்டி இலவசம், 'ஆட்சியாளர்களின் இருப்பை' கண்டுகொள்ளாமல் இருக்க இரண்டு ஏக்கர் நிலம் இலவசம், மின்சாரமின்றி எரியும் மக்களை கட்டுப்படுத்த எரிவாயு அடுப்பு இலவசம், இவ்வாறாக பல்வேறு பெயர்களில் தொடரும் இலவசங்கள் வழங்க அரசின் கஜானாவை நிரப்புவதில் முக்கிய பங்கு வகிப்பது 'டாஸ்மாக்' எனப்படும் அரசின் மது விற்பனை நிலையங்கள் தான் என்றால் அது மிகையல்ல.
 
'டாஸ்மாக்' என்ற பெயரில் அரசே என்றைக்கு மது விற்பனையை தொடங்கியதோ அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனையின் இலக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2010  ம் ஆண்டு அரசு நிர்ணயித்த மது விற்பனை இலக்கான  15 ஆயிரத்து 981  கோடியையும் தாண்டி, டிச.,25 வரை 359 நாட்களுக்கு தமிழக "டாஸ்மாக்' கில்16 ஆயிரத்து 445 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதாவது சராசரியாக தினசரி 45. 80 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இரண்டாயிரத்து 464 கோடி ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 31ம் தேதி வரை மேலும் ஆறு நாட்களுக்கு கணக்கிட்டால் 274.80 கோடி விற்பனையாகும். மொத்தம் 16 ஆயிரத்து 719.80 கோடிக்கு விற்பனையாகும் என டாஸ்மாக் நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.
இவ்வாறு இலக்கு வைத்து மக்களை குடிகாரர்களாக ஆக்கும் அரசு ஒருபுறம் என்றால், பண்டிகை காலங்களில் 'ஒன்று வாங்கினால்  ஒன்று இலவசம்' என்று துணிகள்- அழகு சாதனப் பொருட்கள்- வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்குவார்களே அது போன்று, திருப்பூரில் உள்ள பார் ஒன்றில் பண்டிகையை கொண்டாடும் "குடிமகன்'களை குஷிப்படுத்த,  "கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டம்; உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்; காலை 11 முதல் மாலை 5 மணி வரை மூன்று பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம்; இரண்டு லார்ஜ் வாங்கினால் ஒரு லார்ஜ் இலவசம்; ருசியான ஸ்நாக்ஸ் மற்றும் உணவு வகைகளுடன்,' என நோட்டீஸ் விநியோகித்துள்ளார்கள்.
 
வெங்காய விலை விண்ணை முட்டிக்கொண்டிருக்கையில், மக்களைக்  கெடுக்கும் மதுபானம் இனாமாக கிடைப்பதில் 'குடிமக்கள்' வேண்டுமானால் மகிழலாம். ஆனால் சாமான்யர்கள் அரசின் மீது சரி கோபத்தில் உள்ளதை உணர்ந்து விரைவில் பூரண மதுவிலக்கை கொண்டுவர கருணாநிதி முயற்சிக்க வேண்டும். இல்லையேல் ஆறாவது முறை முதல்வராகும் எண்ணம்  ஆற்றில் கரைத்த உப்பாக ஆகிவிடும் என்பதை உணர்ந்துகொண்டால் சரி!
முகவைஅப்பாஸ்.

No comments:

Post a Comment