தமிழக அரசின் சார்பில், காயல்பட்டினம் அரசு பொது நூலக நூலகருக்கு நன்னூலகர் விருது வழங்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில், குழந்தைகள் தின விழா இம்மாதம் 14ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில், சென்னையிலுள்ள சாந்தோம் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் த.சபிதா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொது நூலகத் துறை இயக்குநர் முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன் வரவேற்றுப் பேசினார். இவ்விழாவில், தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் 32 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூலகங்கள் மற்றும் நூலகர்களுக்கு சிறப்புப் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விருதுகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இவ்விழாவில், காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தில் நூலகராகப் பணிபுரியும் அ.முஜீப் சிறந்த நூலகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதற்காக அவருக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ரூபாய் இரண்டாயிரம் பணப்பரிசு, வெள்ளிப்பதக்கம், சான்றிதழ் மற்றும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது ஆகியவற்றை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த நூலகமாக கோவில்பட்டி அரசு நூலகமும், சிறந்த நூலகராக காயல்பட்டினம் அரசு பொது நூலக நூலகர் அ.முஜீபும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதும், 36 வயதில் சிறந்த நூலகர் விருதைப் பெறும் முதல் நூலகர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் - இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தை என கருதப்படுகிறார். சீர்காழியில் 1892ஆம் ஆண்டு பிறந்த இவர், 1972ஆம் ஆண்டு காலமானார். ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு நூலகத் துறைக்கான விருதுகளை வழங்கி வருகிறது. 2012ஆம் ஆண்டு முதல் சிறந்த நூலகருக்கான விருது, டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது
தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
No comments:
Post a Comment