SMS - Train Booking

வந்தாச்சு... எஸ்.எம்.எஸ் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு:
*******************************************************

வரும் ஜூலை 1-ந்தேதி முதல் எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்துகிறது ஐ.ஆர்.சி.டி.சி.

செல்போன் இல்லாத ஆட்களே இல்லை என்ற காலம் போய், ஆளுக்கு இரண்டு, மூன்று செல்போன்களை தூக்கிக் கொண்டு சுற்றும் காலகட்டம் இது.அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையோடு செல்போன் ஒன்றிவிட்டது.

செல்போன் மூலம் மற்றவர்களை தொடர்பு கொள்ள மட்டுமே முடியும் என்ற நிலை மாறிப்போய் இன்று குட்டி உலகமாய் மாறிவிட்டது. இருந்த இடத்தில் இருந்து கொண்டே காரியத்தை சாதித்துக் கொள்ளும் வசதிகளில் தற்போது, ரயில் முன்பதிவும் சேர்ந்துவிட்டது.

செல்போனில் டிக்கெட்

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) வரும் ஜூலை 1-ந் தேதி முதல் செல்போன் எஸ்.எம்.எஸ் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்பதிவு விவரங்கள்.

விரைவில், ஐ.ஆர்.சி.டி.சி. இதற்கான பிரத்யேக எண் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த எண்ணைப் பயன்படுத்தி பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் பயணிகள், தங்கள் செல்போன் எண்ணோடு, தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயரையும் சேர்த்து ஐ.ஆர்.சி.டி.சி.யில் பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

பயண விவரங்கள்

பயணிகள் தங்கள் பயண விவரங்களான ரெயிலின் எண், எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்ற விவரம், பயண தேதி, பயண வகுப்பு மற்றும் பயணிகளின் பெயர், வயது போன்ற விவரங்களை எஸ்.எம்.எஸ். வழியாக அனுப்ப வேண்டும்.

எஸ்.எம்.எஸ் பரிவர்த்தனை

விவரங்கள் சென்று சேர்ந்த உடன், பயணிக்கு ஐ.ஆர்.சி.டி.சியிலிருந்து ஒரு பரிவர்த்தனை ஐ.டி மெசேஜ் அனுப்பி வைக்கப்படுமாம். பின்னர் மீண்டும் பயணி டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்த மற்றொரு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

வங்கிகள் சப்போர்ட்

‘பே' என ஆங்கிலத்தில் ‘டைப்' செய்து, பரிவர்த்தனை ஐ.டி., வங்கி வழங்கிய மொபைல் மணி ஐடென்டிபயர், பாஸ்வேர்டு ஆகியவற்றை குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்காக வங்கிகள், சம்பந்தப்பட்ட பயணிக்கு ‘மொபைல் மணி ஐடென்டிபயர்' மற்றும் ‘பாஸ்வேர்டு' முதலியவற்றை டிக்கெட் கட்டணத்தை கழித்து கொள்வதற்காக ஏதுவாக வழங்க இருக்கின்றன.

பேப்பர் தேவையில்லை

அப்போது டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விட்டால் அதற்கான ஒரு சான்றாக ஒரு எஸ்.எம்.எஸ். வரும். ரயில் பயணம் செய்ய அந்த எஸ்.எம்.எஸ். மட்டுமே போதுமானது. வேறு பேப்பர் பிரிண்ட் டிக்கெட் தேவையில்லை.

சுற்றுச்சூழல் நலன்

பேப்பர்களுக்காக மரங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அனைத்தையும் கணினி மயமாக்கி வருவதில் இயற்கை ஆர்வலர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே, மொபைல் சந்தாதாரர்கள் இம்முறையை பயன் படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

குறைந்த சர்வீஸ் சார்ஜ்

ஒருமுறை எஸ்.எம்.எஸ். அனுப்ப ரூ 3 கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கிறது. மேலும், பணம் செலுத்துவதற்கான கட்டணமாக, ரூ.5 ஆயிரம் வரையான டிக்கெட்டுகளுக்கு 5 ரூபாயும், ரூ.5 ஆயிரத்துக்கு மேற்பட்ட டிக்கெட்டுகளுக்கு 10 ரூபாயும் கூடுதலாக பிடிக்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தட்ஸ்தமிழ்