வங்கி மைனஸ் வட்டி-7

இரா. முருகன்

அத்தியாயம் 7
ஏம்’பா மழையிலே இப்படித் தொப்பலா நனைஞ்சுக்கிட்டு ஓடியாறியே, ஒரு பர்மா குடையை  கக்கத்திலே இடுக்கிட்டு வீட்டை விட்டுக் கிளம்பியிருக்கலாமில்லே?

இல்லே மாப்ளே. கண்டாங்கிப்பட்டியிலே ஒரு கேதம்.  ஆவன்னா மானா இருக்காகளே, அவுக அம்மாச்சி தவறிட்டாங்க. கல்யாண சாவு மாப்ளே. தொண்ணூத்துமூணு வயசு. தொடுக்கு தொடுக்குனு அந்த வயசிலும் வெள்ளன எளுந்து கம்பங்களி கிண்டி வச்சு. அந்த ருசி. இன்னிமே எங்கிட்டு வாய்க்குமோ.
ஏம்ப்பா, எளவு வீட்டுலே கெளவியைக் குளிப்பாட்டி பல்லக்கிலே ஏத்தி   அனுப்புவாகளா, உனக்குக் கம்பங்களி கிண்டிப் பரிமாறிக்கிட்டு இருப்பாங்களா? இந்தா டர்க்கி டவல். தலையைத் தொடச்சுக்க. ஈரமாவே கிடந்தா தடுமன் பிடிச்சுக்கப் போகுது. கடுங்காப்பி சொல்லட்டா?
சொல்லுங்க மாப்ளே. புண்ணியமாப் போகும். அப்படியே பாக்கி இஸ்லாம் பேங்கு போக்குவரத்து பத்தியும் சொல்லுங்க. மழை இப்பதிக்கு நிக்காது போலே இருக்கே.

அப்ப மழைக்கு இங்கிட்டு ஒதுங்கி இருக்கே. நல்லா இருப்பா, நல்லா இரு. இஸ்திஸ்னான்னா என்னான்னு சொல்லட்டா?
பழைய இந்திப்படம் ஆச்சே. சாய்ப் அலிகான் அம்மா நடிச்சது.
அது ஆராதனா. இது இஸ்திஸ்னா (Istisna). இஸ்லாமிய பேங்குங்க இருக்கே. அதெல்லாம் பெரிய தோதிலே நிதி உதவி செய்யறதுக்கு பயன்படுத்தறது. அதாம்பா, வணிக வளாகம்பாங்களே, பல அடுக்கு மாடி வியாபார அங்காடி, அது மாதிரி, அப்புறம் நட்சத்திர ஓட்டல் கட்ட, கப்பல், ஏரோப்ளேன் இதெல்லாம் உற்பத்தி செய்ய, பிரம்மாண்டமான இயந்திரங்களோட ஒரு தொழிற்சாலையை உருவாக்கி நிறுத்த இதுக்கெல்லாம் கொடுக்கற உதவி.
ஸ்பெக்ட்ரம் அளவு லோனா மாப்ளே?

அப்படிச் சொன்னாத்தான் உனக்குத் திருப்தின்னா ராஜா மாதிரி வச்சுக்க. போகுது. இஸ்திஸ்னான்னா அரபியிலே என்ன தெரியுமா? ‘உற்பத்தி செய்யச் சொல்லிக் கேட்கறது’. நீ பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி பாஸ், நான் பைவ் ஸ்டார் ஓட்டலை கட்ட வச்சு நடத்தப்போற கோடீஸ்வரன்னு வச்சுக்க. நாம ஒப்பந்தம் போட்டுக்கறபோது அந்த ஓட்டல் இருக்காது. இந்தத் தேதியிலே முடிச்சு கையிலே தரணும்னு கண்டிஷனா காண்ட்ராக்டும் போட முடியாது. முன்னே பின்னே ஆகுமில்லே. அப்போ இஸ்திஸ்னா ஒப்பந்தம் தான் சரிப்பட்டு வரும்.
இஸ்திஸ்னாவிலே என்ன விசேஷம் மாப்ளே?
நான் உனக்கு அட்வான்ஸ் தொகையின்னு ஏதும் தரணும்னு கட்டாயம் இல்லே. ஒப்பந்தப்படி கட்டி முடிச்சதும் ஒப்பந்தத் தொகைக்கு ஒரே செக்கா வெட்டிடலாம். இல்லியா, அப்பப்போ கொஞ்சம் தரலாம். கட்டி முடிச்சு கையிலே வந்தாலும் கூட உடனடியா அடைக்கணும்னு இல்லே. தவணை முறையிலே நான் பணம் தரலாம். அது எம்புட்டுன்னு ஒப்பந்தத்துலேயே போட்டுக்கலாம்.

சரி, போனாப் போவுது, உங்களுக்காக பைவ் ஸ்டார் ஓட்டல் நாளைக்கு காலையிலே கருப்பாயி ஊரணியிலே நிலம் வாங்கி கட்ட ஆரம்பிக்கறேன். முடிச்சதும் தாக்கல் சொல்றேன். நம்ம ஸ்விஸ் பேங்க் கணக்குலே நூத்தம்பது கோடி ரூபாய் முதல் தவணை கட்டிடுங்க. சொணங்கிடக் கூடாது மாப்ளே, என்ன?
ஏத்தம் தான்’பா உனக்கு. இஸ்திஸ்னாவிலே இன்னொரு விஷயம் இருக்கு. நீ என்னை செங்கல் வாங்கிக் கொடு, சிமிண்டுக்கு அலைஞ்சு கொண்டு வந்து இறக்கு, மணல் மாபியா கிட்டே நூறு வண்டி ஆத்து மணல் சப்ளை பண்ணச் சொல்லுன்னு எல்லாம் நச்சரிக்கக் கூடாது. நீயே தான் கட்டுமானத்துக்கான பொருள் சப்ளையைப் பார்த்துக்கணும். மணல் மாபியாவை மட்டும் அண்ட விடாதே.

உங்க இஷ்டம் மாப்ளே. தட்டுவேனா என்ன? ஆமா, இதுக்கு முந்தி எல்ஜாரா, பே சலாம்ன்னு கிட்டத்தட்ட இதே மாதிரி நிதி உதவி பத்தி சொன்னீங்களே. அதான் வீடு கட்டக் கடன், ஹையர் பர்ச்சேஸ், லீசிங் இப்படியான சமாச்சாரம். அதுக்கும் இஸ்திஸ்னாவுக்கும் என்ன வித்தியாசம்?
இருக்குப்பா. இஸ்திஸ்னாவுலே என்னிக்குத் தேதிக்கு டெலிவரின்னு முன்கூட்டியே நிச்சயிச்சுக்க வேண்டாம். கட்டி முடிச்சு கொடுத்திடணும். அம்புட்டுத்தான். அப்புறம் அட்வான்ஸ். அப்படி ஒண்ணு கொடுக்கணும்னு அவசியம் இல்லே. இன்னொண்ணு. இஸ்திஸ்னாவிலே நீ ஓட்டல் கட்டிக் கொடுக்கறேன்னு கையெழுத்து போட்டு சத்தியம் பண்ணிட்டு வேலையை ஆரம்பிச்சா, முடிச்சுத்தான் ஆகணும். வேலையை தொடங்க முந்தி வேணும்னா இஸ்திஸ்னா ஒப்பந்தத்தை ரத்து பண்ணலாம். ஆரம்பிச்சாச்சுன்னா நோ கான்சலேஷன்.
ப்ராப்ளம் தான் மாப்ளே நமக்கு. ஆயிரத்தெட்டு சோலியை வச்சுக்கிட்டு உங்களுக்கு ஓட்டலைக் கட்ட ஆரம்பிச்சு முடிக்கலேன்னா அண்ணா அறிவாலயம் கிட்டே அரைகுறையா நிக்கற கட்டடம் மாதிரி போயிடும். சரி, நாம அப்புறம் பைவ் ஸ்டார் ஓட்டல் கட்டிக்கலாம். இஸ்லாமிய பேங்கு இஸ்திஸ்னாவிலே எங்கே வந்திச்சு?

அதுவா? எங்கிட்டே நிலம் இருக்கு. பைவ் ஸ்டார் ஓட்டல் கட்ட உன்னிய மாதிரி பல சோலிக் காரனை நம்பாம, பேங்குக்கே போறேன். ஓட்டல் கட்ட என் கையிலே நூறு கோடி  சில்லறையா இல்லே. பேங்கு என்ன செய்யும் தெரியுமா? என் கிட்டே என்ன மாதிரி ஓட்டல், என்ன ப்ளான், எத்தனை ரூம், அதிலே பாத்ரூம் சுவர் என்ன பெயிண்ட், எத்தனை லஸ்தர் விளக்கு, ரூம்லே ஏர்கண்டிஷனர் எத்தனை டன் இப்படி சகல விவரத்தையும் நுணுக்கமாக் கேட்டு வாங்கி பதிவு பண்ணி கணக்குப் போடுவாங்க பேங்குக்காரங்க.
சைபரைக் கொஞ்சம் அங்கனே இங்கனே குறைச்சுப் போடச் சொல்லுங்க மாப்ளே.

சொல்றேம்ப்பா. பேங்கு கணக்குப் போட்டு முடிச்சதும் என்கிட்டே தொகையைச் சொல்லி உன் நிலத்துலே நீ கேட்ட மாதிரி அச்சு அசலா பைவ் ஸ்டார் ஓட்டல் கட்டி முடிச்சு உன் கிட்டே ஒப்படைக்க இதான் செலவு. இதை நீ ஓட்டல் சாவியைக் கையில் வாங்கினதும் ஒரே முட்டா கொடுக்கலாம். இல்லியா, தவணை முறையிலே தரலாம். இதான் தவணைத் தொகைன்னு சொல்லிடும். வட்டி இல்லே. இந்த வேலையிலே இந்த லாபம் கிடைக்கும்னு முன் கூட்டியே சொல்லிடறது.
ஆமா மாப்ளே, பேங்குக்காரங்க எல்லாம் கொத்துக் கரண்டியைக் கையிலே பிடிச்சுக்கிட்டு கட்டடம் கட்ட அலைஞ்சா, பேங்கு வேலையை யார் பார்க்கறது?

அட, பேங்குக்காரங்களா டையும் கோட்டுமா சாரத்திலே சிமிண்டு தூக்கிட்டுப் போகப் போறாங்க. சப் காண்ட்ராக்ட் விட்டுக் கட்டி முடிப்பாங்கப்பா. அதுக்கு கட்டட காண்ட்ராக்டரோட ஒரு இஸ்திஸ்னா போட்டா தீர்ந்தது விஷயம்.
சரி மாப்ளே. மழை விட்டுடுத்து. கிளம்பட்டா? கடுங்காப்பி சூப்பரா இருக்குது உங்க வீட்டுலே. சீக்கிரமா இஸ்லாம் பேங்கு அரட்டையை முடிச்சுடாதீங்க என்ன? கம்பங்களிதான் இல்லேன்னு ஆகிப் போச்சு. கடுங்காப்பியாவது ஸ்டடியா கிடைக்கட்டுமே.
பார்க்கலாம்பா. அடுத்த முறை நீ கடுங்காப்பிக்கு வரும்போது க்வார்ட் ஹசன் பத்தி சொல்றேன், இன்ஷா அல்லாஹ்.
(தொடரும்)

No comments:

Post a Comment