(பீ.எம். கமால், கடையநல்லூர்)
அன்பே!
இறைமையின்
பண்புப்பெயரே !
நீதான்
தாய்மையை
அர்த்தப்படுத்துகிறாய் !
உள்ளங்களில் உன் திரி
எரியாவிடிலோ
ஞான விடியல்களின்
கருத்தரிப்பே நடக்காது !
இதய அகலில்
எரியும் உனது
சுடர் ஒளியால் தான்
எங்களை நாங்கள்
படித்துக்கொள்கிறோம் !
அன்பே !
நீ உடைத்தாயின்
எல்லாம் உடையோம் !
நீ உடைந்தாயின்
எல்லாம் உடைத்தோம் !
நீ சிலநேரம்
கருப்பாய் எரிந்து
கண் சிமிட்டும்போது
எங்கள்
உதடுகளின் உச்சரிப்பில்
அர்த்த பேதங்கள்
உண்டாகின்றன !
வார்த்தைகளோ
அழுக்கின் நெடியுடன்
அழுகி விடுகின்றன !
அன்பே !
வேதனை வெயில்கூட
உன்
வெளிச்ச நிழலில்
இளைப்பாறி விடுகிறது !
அன்பே ! நீ
இதய வாக்கியத்தின்
உயிரெழுத்தோ ?
நீயின்றி எங்கள்
நாவுத்தறிகள் அசைந்தாலோ
ஒட்டடையைக்கூட
நெய்ய முடியாது !
எங்களின் உயிர்
மெய்யாவதற்கு
நீதான் உன்னைத்
தானம் செய்கிறாய் !
உன் சிதையிலோ
எங்கள்
உயிர்ப்புக்கள் செத்து
அநாதை ஆகிவிடும் !
அன்பே ! உன்
மையூற்றி
எழுதப்படாத கடிதங்கள்
யாராலும் படிக்கப்படுவதில்லை !
நீ அதன்
முகவரி என்பதால் !
அன்பே ! உன்
மீசையில் மண்
ஓட்டுவதே இல்லை !-
உனக்கு
தோல்வியே இல்லையதால் !
நீ
பந்தயமின்றியே
ஜெயித்துவிடும் பலசாலி !
நீயே வெற்றி என்பதால் !
அன்பே !
உள்ளம் உனது
வீடென்றால்
வார்த்தைகள் உனது
வாசல்கள்
விழிகளோ உனது
ஜன்னல்கள் !
உறவுகள் உனது
தலைவாசல் படிகள் !
சத்தியம் உன்னைத்
திறக்கும் சாவி !
அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ் ?
உண்டு -
சாவி சில நேரம்
தொலைந்து விடும்போது !
அன்பே !
பிரிவுத்தராசில் நீ
உட்காரும்போது
உன்
எடைக்கு எடை போட
எவராலும் முடியாது !
கடல் குளம் நதியாய்க்
கண்களை நீதான்
காட்டிக்கொடுக்கிறாய் !
அன்பே !
பிரிவின்போது
கட்டிய மனைவியின்
காதல் கண்களில்
நிறமற்ற உப்புத்திரவமாய்
நீ மாறுகின்றாய் !
தாயின் கண்களிலோ
சிவப்பாகிப் போகின்றாய் !
அங்கே நீ
குருதியாய் உருமாறி
உன்
நிறத்தை மட்டுமல்ல-
கனத்தையும் அங்கே
காட்டிவிடுகின்றாய் !
No comments:
Post a Comment