(பீ. எம். கமால், கடையநல்லூர்)
MUSTAFA KAMAL
கண்கள் எழுதும்
கவிதை வரிகளே !
நீங்கள்
அற்புதமானவர்கள் !
சில சமயம் எங்களுக்குப்
புரிகிறீர்கள் !
சிலசமயம் எங்களுக்குப்
புதிராகிறீர்கள் -
அப்துல் ரகுமானின்
கவிதைகள் போல !
அன்றாடம் புதுக் கவிதையாய்ப்
பொங்கும் நீங்கள்
மரணப் படுக்கையில் மட்டும்
மரபுக் கவிதை ஆகிறீர்கள் !
துக்கத்தின் தூதுவர்களே !
நீங்கள்
ஒப்பாரி ராகத்தின்
உருவ நீர்த்துளிகள் !
நீங்கள்
ஏழையின் வயிறு
எரிந்திடும்போது
கண்ணகல் தீபங்கள் !
தீய
ஆட்களை நீங்கள்
எரித்திடும்போதோ
அக்கினி ஆறுகள் !
உயர்திணைக் குர்றாலங்கலே !
.நீங்கள் விழும்போது
பலருக்குப் பைத்தியம்
பிடிக்கிறது !
சிலருக்கு மட்டுமே
ஞானம் பிறக்கிறது !
முகாரியை முணுமுனுக்கும்போது
.முண்டியடித்து வரும் நீங்கள்
மோகனத்தின் மூர்சையில்தானே
முகம் காட்டுகிறீர்கள் !
ஏனிந்த பாரபட்சம் ?
சுண்ணாம்பு-வெண்ணெயை
எங்களிடமிருந்தே
படித்ததினாலா ?
சமத்துவம் உங்கள்
தாய்போலக் கரிக்கிறதோ ?
எங்களின்
கருணை மனுக்களே !
நீங்கள்
எழுதப் படும்போதே
அங்கீகரிக்கப் படுகிறீர்கள் !
கோழைகளுக்கு நீங்கள்
துரோகிகள் !-
அவர்களைக்
காட்டிக் கொடுப்பதால் !
ஞானிகளின் கண்களில்
நீங்கள் விரல்கள்-
சொர்க்கத்தைத் தட்டுவதால் !
பணக்காரன் கண்களில்
நீங்கள் பாதரசம்-
பசையே இல்லாததால் !
நீங்கள்
ஆண்டவன் எழுதும்
விதியின் ரேகைகளோ ?
கடலின் கார்டூனா ?
எதுவானாலும் நீங்கள்
ஆராதனைக் குரியவர்கள் !
பெருமானார் விரும்பிய
வறுமையின்
முகவரி என்பதால் !
No comments:
Post a Comment