எச்சரிக்கை இறுதி நாள்(கியாமத்) நெருங்குகிறது!!!



      {சேகரித்து வழங்கியது:மு.மன்சூர் அலி,யிலாடுதுறை.609001}

 உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.

இந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது:- உலகின் அழிவு துவங்கிவிட்டது. நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும். பூமியானது தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில் பறக்கும் என்று விஞ்ஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதனையே இறைவன் 1425 வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானம் என்றால் என்ன என்று தெரியாத காலகட்டத்திலேயே திருக்குர்ஆனில் கூறும் பொழுது

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது - இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99:1,2)

பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)

இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)

வானம் பிளந்து விடும்போது (84:1)

வானம் பிளந்து விடும்போது - நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, (82:1-4)

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)

இவ்வாறு இறைவன் திருக்குர்ஆனில் உலகின் அழிவைப் பற்றி முன்னறிவிப்புகளைச் சொல்லியிருக்கிறான்

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உலகின் அழிவைப் பற்றிக் கூறும் பொழுது...

''நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்'' என்று தன் இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள்.(புகாரி)

உலகம் அழிவை நெருங்கும் போது என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்று 1425 வருடங்களுக்கு முன்னரே இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் முன்னறிவிப்பு செய்துவிட்டான். அந்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றாக இந்த காலகட்டத்தில் அப்படியே பொருந்தி வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

இதோ அம்முன்னிவிப்புகளில் ஒருசில...

'காலம் சுருங்கி விடும்' எந்தளவுக்கென்றால் 'ஒரு வருடம் ஒரு மாதம் போல் ஆகிவிடும், ஒரு மாதம் ஒரு வாரம் போல் ஆகிவிடும், ஒரு வாரம் ஒரு நாள் போல் ஆகிவிடும், ஒரு நாள்; ஒரு மணிநேரம் போல் ஆகிவிடும், ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல் ஆகிவிடும்' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபுப் பிரதேசம் வளமே இல்லாமல் வெறும் பாலைவனமாக காட்சியளித்தது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது'' (முஸ்லிம்-157)

விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்சம் மறைத்து செய்யக் கூடாதா? என்று சொல்பவன் தான் அப்போது நல்லவன். (புஹாரி.5577,5580) (மும்பையில் மட்டும் 12000க்கும் மேற்பட்ட விபச்சார விடுதிகள் உள்ளன)

தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும். (இப்னுமாஜா)

(இந்த நவீன யுகத்தில் ''எயிட்ஸ்'' என்ற உயிர்க்கொல்லி நோய் வந்துவிட்டதை பார்க்கிறோம்.)

ஒரு காலம் வரும் ''மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்''. (புஹாரி :5581,5231)

என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அபூதாவூத்)

அருகதையற்ற கெட்டவர்கள், தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.(புகாரி)

(இந்த இழிவான நிலையை, குக்கிராமங்கள் முதல் வல்லரசு நாடுகள் வரை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.)

ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது. பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம் :3921)

சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்.(திர்மிதி)

காலையில் ஈமானுடனும், மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள். (திர்மிதி)

எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். (முஸ்லிம்) (ஒரு கோப்பை தேநீருக்கெல்லாம் கொலைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம்)

முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள். (புகாரி)

பூகம்பங்கள் அதிகம் ஏற்படும். (புகாரி)

பூமி அலங்கரிக்கப்படும். (திர்மிதி)

பருவ மழைக்காலம் பொய்க்கும்.

திடீர் மரணங்கள் அதிகரிக்கும், மனித ஆயுள் குறையும்.

முஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர்.

பெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள். (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)

யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ''இட நெருக்கடி ஏற்படும். மக்கள் ஒரே இடத்தில் வந்து குவியும் போது கட்டிடங்கள் உயரமாகும்''(நகரங்களின் மக்கள் தொகைப் பெருக்கத்தையும் அதனால் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகமாவதையும் நாம் காண்கிறோம்.)

வியாபாரமுறைகள் மாறும் (புகாரி)

(இன்டெர்நெட் மற்றும் கடன் அட்டைகள் மூலம் புதிய விதங்களில் வியாபார முறைகள் மாறியுள்ளதைக் காண்கிறோம்.)

பழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும். (முஸ்லிம்)

ஒரு தடவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.(முஸ்லிம்)

திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாட்டார்கள். (பைஹகி)

சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர்.

ஃபித்னா (குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும். (புகாரி, முஸ்லிம்)

சின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.

பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்.

சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும்.

பொருளாதார வளர்ச்சி அதிகமாகும். (புகாரி : 7121,1036,1424)

பொய் மிகைத்து நிற்கும். (திர்மிதி)


உங்களிடம் ஒரு காலம் வந்தால், பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மோசமாகவே இருக்கும். (புகாரி :7068)

அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். (புகாரி)

முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.

பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும். (அபூதாவூத்)

 
முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் படித்து செயல்பட வேண்டிய நபிமொழி:
நீங்கள் யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான், அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி: 7319, 3456)

(சந்தனக்கூடு, கொடிமரம், சமாதி வழிபாடு, அவ்லியாக்களுக்கு நேர்ச்சை, கப்ரை உயர்த்திக் கட்டுதல், தஸ்பீஹ் மணி, மவ்லூது பாடல்கள், இசைக்கச்சேரிகள், உரூஸ் உண்டியல், யானை குதிரை ஊர்வலங்கள், இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள், வட்டி வாங்குதல், வரதட்சணை பிடுங்குதல், ஜோதிட நம்பிக்கை, திருமணத்தில் பெண்ணுக்கு தாலி கட்டுதல் மற்றும் வாழைமரம் நடுதல், பிறந்த நாள் விழா எடுப்பது, ஆண்கள் தங்கம் அணிவது இது போன்ற பழக்கவழக்கங்களை மாற்று மதத்தவரிடமிருந்து முஸ்லிம்கள் அப்படியே காப்பியடித்து பின்பற்றுவதை நடைமுறையில் கண்டு வருகிறோம்.)

எனவே சகோதர சகோதரிகளே! நாம் செய்ய வேண்டியது என்ன?

மரணவேளை எப்போது நிகழும் என்று எந்த மனிதனும் அறிய முடியாது. அவ்வேளை நெருங்கி வரும் முன் நாம் நமது அமல்களைப் பெருக்கிக் கொள்வோம். ''இஸ்லாம்'' இறைவனின் மார்க்கம்தான் என்று சந்தேகமற நம்பவேண்டும். இறைவன் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால், இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் இறைவன் சொன்ன கட்டளைக்கு மாறு செய்யாமல் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். நமது ஈமான் (நம்பிக்கை) அதிகமாக வேண்டும்.

விபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளவேண்டும்.

நேர்வட்டி, ஏலச்சீட்டு, பிக்சட் டெபாசிட், எல்.ஐ.சி போன்ற அனைத்து வகை ஹராமான வட்டிகளைவிட்டும் முற்றிலும் ஒதுங்க வேண்டும்.

மது, சூதாட்டம், போதைப் பொருட்கள் போன்ற இறைவன் விரும்பாத அனைத்து செயல்களைவிட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

ஏமாற்றுதல், அளவு நிலவையில் மோசடி செய்தல், அமானித மோசடி, வாக்கு மாறுதல், பொய் பேசுதல் போன்ற இழிசெயல்கள் நம்மைவிட்டு ஓடிவிட வேண்டும்.

அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவது, இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசுவது, பொறாமைப்படுதல், அவதூறு கூறுவது, குடும்ப சண்டைகள் போன்ற நாகரிகமற்ற செயல்களை விட்டும் நாம் விடுபட வேண்டும்.

இறைவனின் கட்டளைக்கு மாறான, அற்பச் செயலும், சமூகக் கொடுமையும், அக்கிரமமும், அநியாயமும், அநாகரிகமுமான வரதட்சணை போன்ற பாவங்களிலிருந்து நாமும் விலகி, நம் சமூகத்தையும் விலக்க வேண்டும். இவ்வரதட்சணைக் கொடுமைக்கு துணைபோகிறவர்கள், இக்கொடுமையை இழைப்பவர்கள், இதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் தண்டனைக்குரியவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

எல்லாவற்றையும் விட மிகப்பெரிய அநியாயமும், அக்கிரமுமான இறைவன் மன்னிக்காத, இறைவன் விரும்பாத சமாதி வழிபாடு, பெரியேர்களுக்கு நேர்ச்சை செய்வது, ஜோசியம் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, நல்லநேரம் என நம்புவது, செய்வினைகளை நம்புவது, குத்பியத் மவ்லிது போன்ற இணை வைத்தல்கள் (ஷிர்க்) என்னும் மகா பாவங்களிலிருந்தும், மூட பழக்க வழக்கங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொண்டு இந்த மாய உலகத்தில், நாம் எதற்காக படைக்கப் பட்டிருக்கின்றோம்? நமது இலட்சியம் என்ன? என்று நம்மை நாமே உணர்ந்து செயல்படுவோமாக!

இன்று இஸ்லாத்தின் எதிரிகளால்; ''இஸ்லாமிய பயங்கரவாதம்'' என்ற விஷப் பிரச்சாரம் உலக அளவில் முழுவீச்சில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இக்காலச் சூழ்நிலையின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, திருக்குர்ஆனை அதன் மொழியாக்கத்தோடு நாம் படித்து, சிந்தித்து, அவைகளை நாம் பின்பற்றி நடப்பது மட்டுமல்லாது மாற்று மத நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, பிற சமூகமக்களுக்கும் திருக்குர்ஆனை படிக்கக் கொடுத்து ''இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டும் மார்க்கமல்ல, மாறாக சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம்'' என்பதை எடுத்துக் கூறும் முக்கியக் கடமைகளும் நம்மீதுள்ளது என்பதையும் புரிந்து நடப்போமாக!

நமது வாழ்க்கை நெறி திருக்குர்ஆனாக இருக்கட்டும்!

நமது வழிமுறை இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவடாகவே அமையட்டும்!!

இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா? (திருக்குர்ஆன் 29:64)

நேரம் நெருங்கி விட்டது (திருக்குர்ஆன் 54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:1)

 
சிந்திப்போம்!! ஈருலக வெற்றியினைப் பெறுவோம்!!!.

மு.மன்சூர் அலி,
யிலாடுதுறை.609001

No comments:

Post a Comment