பெருமானாரின் இறுதி ஹஜ்



(பி. எம். கமால், கடையநல்லூர்)
 
ஆயிரத்து நானூறு
ஆண்டுகட்கு முன்னால்
சூரியன் முகத்திலும்
சூனிய இருட்டுப்பூச்சு !
 
வெளிச்சம் செத்த
பாலை எங்கும் இருட்டு !
 
உளிகள் கொத்திக்
குதறிய கற்கள்
தௌஹீதுக் கொள்கைக்கு
தடைக் கற்களாயின !
 
வினாடிகளின் நாடித்துடிப்பு
வேர்பரிக்கத் துடித்தது !
 
இரவுகள் விடியலைத் தின்று
வீங்கிக் கிடந்தன !
ரணமாகிச் சீழ் பிடித்த
மாதங்கள்
சர்வரோக வருடத்தை
சாஸ்வதமாக்கின !
 
பாவக் கைகளின்  பரிசாய்
கால ஓவியங்களில்
கறைகள்... கறைகள்...கறைகள் ....!
கறைகளைத்  துடைத்து
ஒதுக்கவா ?
காலத்தையே உடைத்துப்
புதுக்கவா
அந்த ஒளி ?
 
இருட்டு அச்சில்
கரும்பந்தாய்
சுற்றிய உலகம்
 
தன்  உருவத்தைக்
காறித் துப்பிவிட்டு
தன்
 
மூல ஒளியைக் காண
சிலிர்த்துக்
கோடிச் சூரியப்
பிரகாசமானது !
 
அந்த
மூல ஒளிதான்
இந்தப் பூமி அகலில்
சுடர் விட்டொளிரும்
மனிதத் திரிகளுக்கும்
ஒளியை வழங்கிய
வள்ளல் நாயகம் !
ஆமாம் !- தனது
பேரொளியைப் பகிர்ந்தளித்த
வானவன் தூதர்
வள்ளல் நாயகம் !
 
எங்கள் நாயகம் ஒளியா ?
இல்லை நிழல் !
ஓர்  அருவத்தின் நிழல் !
நிஜத்தை உணர்த்த வந்த
நிழல் !
அந்த நிழலுக்கேது
இன்னொரு நிழல் ?
 
பெருமானார்-
சொர்கத்திற்கு
இறைவன் அளித்த
மக்கத்துப் பரிசு !
 
நேற்று-
வானமும் பூமியும்
பிறந்த தாய் மண்ணில்
வேர்களையும் மணக்க வைத்த
வெள்ளைப் பூக்கள்
தௌஹீதுத் தென்றலில்
தலையசைத்து  நின்றன !
 
அந்த
மலர்களின் மத்தியில்
பெருமானார் பேசினார்கள் !
பேச்சா அது ?
இல்லை !-
இறைவழிப்பட்ட மூச்சு !
 
திருமறை மொழி
வெள்ளமாய்
பிரவகித்தோடிய
பெருங்கடல் மடைதிறப்பு !
 
அன்று-
வேற்றுமை பகைமை
பொய்மை ஆகிய
ஆன்மச்சுவரை
அழுக்காகுகின்ற
கருமைகளைப் பெருமானார்
காலடியில் மிதித்தார்கள் !
 
அந்தப் பெருவெளியில்
அண்ணல் பெருமானார்
திருமறையின் ரத்தினச்
சுருக்கத்தைப் பேசினார்கள் !
 
அன்று-
அரபாத் பெருவெளியில்
எங்கும் தலைகள் !
சிலைகள் என்னும்
தளைகள் உடைத்த
தத்துவத் தலைகள் !
 
அந்தச்
சமத்துவத் தலைகளில்
எதிர்காலத்தின்
வெளிச்சங்கள்
உறைந்து  கிடந்தன  !
 
அந்தப்
பெருவெளித் திடலில்
பெருமானாரிடம்
 இறைவன் தனது
"சாவி" ஒன்றைத் தந்தான் !
 
இஸ்லாத்தின்
சம்பூர்ணச் செய்தியைத்
திறந்த சாவியது !
சாவி மட்டுமா அது ?
எம்பெருமானாரை
இறைவன் தன பக்கம்
அழைத்த சமிக்ஞைத
தூதும் அதுதானே ?
 
பெருமானாரின் ஹஜ்
மக்காவில் முடிந்தது !
நமது ஹஜ்ஜோ
மக்காவிலேயே முழுமை பெறாமல்
மதீனத்து மண்ணில்தான்
மகத்துவம் பெறுகிறது !
 
பெருமானார்  அன்று
கஹ்பதுல்லாவிடம்
பிரியா விடைபெறச் சென்றார்கள் !
நாமோ
ஒவ்வொரு ஆண்டும்
ஆன்மாவின் அழுக்கை நீக்கி
அல்லாஹ்விடம் ஒப்படைக்கச்
செல்லுகிறோம் !
இருக்கின்றவர்க் கெல்லாம்
இறையில்லம் காபாவே
ஹஜ்ஜு செய்கின்ற
கடமைத் தலமாகும் !
 
இல்லாத ஏழையர்க்கோ
சலவாத்துக்களே
ஆன்மா வலம்வரும்
அற்புதக் காபா !
பெருமானார் செய்த ஹஜ்
ஹஜ் அல்ல-
உயிர்த்தவம் !
 
மனத்தின் கரங்கள்
இறைவனை அணைத்த
அற்புத நிகழ்ச்சி அது !
 
பெருமானார் செய்த ஹஜ்
இறுதி ஹஜ் மட்டுமல்ல-
முதல் ஹஜ்ஜும் அதுவேதான் !
 
ஹிஜ்ஜதுல் விதா-
பேரிறைவன் தன
மூல ஒளித் தூரிகையால்
சுவனத்துச் சித்திரமாய்
இஸ்லாத்தை வரைந்து
முழுமை ஆக்கிய
முக்கியத் திருநாள் !
 
ஹஜ்ஜென்னும் கடமை
விதியில்லை என்றிருந்தால்
பாவங்களின் தலைமையில்
நமது பயணம்
நரகத்தை நோக்கியே
நாளெல்லாம் தொடர்ந்திருக்கும் !
சமத்துவத்தின் கருத்தரிப்பு
சமாதிக்குள் போயிருக்கும் !
 
நாங்கள்
உள் வாங்கிய மூச்சு
வெளிப்படும்போது
ஏகத்துவ மணத்தை
எங்கும் பரப்புகிறது !
 
இது-
எங்கள் பெருமானார்
அன்றளித்த
பயிற்சியினாலன்றோ ?
இந்த மோன ரசவாதம்
இன்றும் தொடர்கிறது !
 
இறுதி நாள் வரை
இது
என்றும் தொடரும் !

No comments:

Post a Comment