செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடெமி (?)
This page has been viewed 718 times | View Comments (0) <> Post Your Comment
கறிக்கோழிகளை வேகமாக வளர வைப்பதற்காக உணவுடன் வேதிப் பொருள்கள் கலந்து வழங்கப்படுவதால், அதை சாப்பிடுகிறவர்கள் நோயில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் உணவுத்தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. அண்மைக்காலமாக அசைவ உணவுகளின் தேவை அதிகரித்து வருகிறது. இன்று அசைவ உணவில் கோழிக்கறி முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
அசைவ உணவுத் தேவையில் 50 சதவிகிதத்துக்கு மேல் கறிக்கோழி பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தேவை அதிகரிப்பால் கறிக்கோழி வளர்ப்பில் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலத்தில் முன்பு நாமக்கல் கரூர் மாவட்டங்களில்; மட்டுமே இருந்த கறிக்கோழி வளர்ப்புத் தொழில் இப்போது மாநிலம் முழுவதும் பரவி சிறந்த தொழிலாக உருவாகி வருகிறது.
இருப்பினும் நாமக்கல், கரூர் பகுதிகளில் இருந்தே கறிக்கோழி குஞ்சுகள் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. இக்கோழிக்குஞ்சுகளை வளர்த்து பண்ணையாளர்கள் குஞ்சுகளைக் கொடுத்த நிறுவனத்திடமே வழங்குகின்றனர். இதில் அந்த நிறுவனங்கள் கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதற்குரிய தீவனங்களை வழங்குகிறது.
கோழிகளைப் பராமரித்து வளர்ப்பது மட்டுமே பண்ணையாளர்களின் பொறுப்பாக உள்ளது. கோழியின் எடையைப் பொருத்து பண்ணையாளர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. இதனால் கோழிப் பண்ணையாளர்களுக்கு தாங்கள் எந்த வகை தீவனத்தை கோழிகளுக்கு வழங்குகிறோம் என்பதே முழுமையாக தெரியாமல் உள்ளது.
தேவை அதிகரிப்பால் சில கறிக்கோழி வளர்ப்பாளர்கள் பல குறுக்கு வழிகளை அண்மைகாலமாக கையாண்டு வருகின்றனர். முட்டையில் இருந்து கோழிக்குஞ்சு வெளியே வந்து 65 நாள்களில் தான் அது உணவுக்குப் பயன்படுத்துவதற்குரிய வளர்ச்சியைப் பெறுவதால் கறிக் கோழிகள் சிக்கன் 65 என சில ஆண்டுகளுக்கு முன்புவரை அழைக்கப்பட்டு வந்தது.
இந்த கோழிக்கறியை அதிகம் சாப்பிடும் பெண் குழந்தைகள் விரைவில் பூப்படைகிறார்கள். கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த உணவு சுகாதாரமானதல்ல என சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகார் கூறப்பட்டது. ஆனால் கறிக்கோழி வளர்ப்பை வரைமுறைப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இதன் விளைவாக சிலர் கறிக்கோழி வளர்ப்பில் மேலும் பல்வேறு கொடிய நோய்களை உருவாக்கும் குறுக்குவழியை கையாளத் தொடங்கி உள்ளனர்.
கோழிகள் வேகமான வளர்ச்சியை எட்டுவதற்கு தீவனங்களில் வேதிப் பொருள்களை கலந்து கொடுத்து வருவதாக இப்போது புகார் எழுந்துள்ளது.
இதில் கோழியின் வளர்ச்சியை வேகப்படுத்தும் ஹார்மோன்களை விரைந்து சுரக்கும் வகையில் வேதிப்பொருள்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கோழிகள் சாதாரணமாக 120 நாள்களில் பெற வேண்டிய வளர்ச்சியை 35 நாள்களில் இருந்து 40 நாள்களில் பெறுகின்றன.
இதன் காரணமாக இந்த தீவனப் பொருள்கள் கறிக்கோழி வளர்ப்பாளர்கள் ஹோட்டல் தொழிலாளர்கள் மத்தியில் சிக்கன் 35 என்றே அழைக்கப்படுகிறது. தீவனம் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையில் செலவைக் குறைத்து லாபத்தை அதிகரிப்பதால் கறிக்கோழி வளர்ப்பாளர்கள் இந்த குறுக்கு வழியை கையாளுகின்றனர். கோழிகள் விரைவிலேயே வளர்ந்து விடுவதால் கறிக்கோழி வளர்ப்பாளர்கள் பயன் அடைந்தாலும் அதைத் தொடர்ச்சியாக சாப்பிடுகிறவர்களுக்கு நோய் வருவது உறுதி என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
புற்றுநோய் ரத்தசோகை ஆண்மைக்குறைவு பெண்களுக்கு மலட்டு தன்மை என இதைச் சாப்பிடுவதால் வரும் நோய்களைப் பட்டியலிடுகின்றனர் மருத்துவர்கள். இவ்வளவு பெரிய நோய்கள் அந்த கோழிகளில் இருந்து பரவுவது தெரிந்தும் அரசு மௌனம் சாதிப்பது தான் புரியாத புதிராக உள்ளது. இதுவரை அரசு அதிகாரிகள் இந்த வகை கறிகளை எந்தக் கடைகளிலோ அல்லது ஹோட்டல்களிலோ பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
இனியாவது மக்களின் நலன் கருதி கறிக்கோழி வளர்ப்பை முறைப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
நன்றி : தினமணி.
No comments:
Post a Comment