இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாள் ஜனவரி 25-ஆம் தேதி ஆகும். ஜனநாயகத் தேர்தல் முறைமைகளில் குடிமக்களின் பங்கேற்பை அதிகப்படுத்தும் ஒரு முயற்சியாக, 2011 -ஆம் ஆண்டு ஜனவரி 25 -ஆம் தேதி தொடங்கி ஒவ்வோராண்டும் ஜனவரி 25 -ஆம் நாளை தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாட இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் வாக்காளர் பதிவை அதிகப்படுத்தி, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு உணர்துவதேயாகும். தேர்தல் நடைமுறைகளில் பொது மக்களை - குறிப்பாக இளைஞர்களை - ஈடுபடுத்தி, வாக்காளர்களின் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கத்துடன், முதலவாது தேசிய வாக்காளர் தினத்தை பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டங்களுக்கு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் மற்றும் ஒவ்வொரு வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில அளவிலான விழா மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் தலைமையில் ராஜ்பவனில் நடைபெறும். அவ்விழாவில் ஆளுநர் அவர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை ஏற்கவைத்து, சிறப்புரையாற்றுவார். புதிதாக பதிவு செய்யப்பட வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையினையும் அவர் வழங்குவார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், திரு சையது முனீர் ஹோதா (IAS Retd.), அவர்களும், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திருமதி எஸ்.மாலதி, IAS அவர்களும் வாழ்த்துரை வழங்குவார்கள்.
வலுவான ஜனநாயகத்திற்கு பெருமளவில் பங்கேற்றலின் முக்கியத்துவத்தையும் அதில் இளைஞர்களின் பங்கையும் உணர்த்தும் வகையில் இவ்விழாவில் பள்ளிச் சிறார் மற்றும் இளைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். தேசிய ஒருமைப்பாட்டை குறித்த பாடல்களும், ஜனநாயகத்தில் பொறுப்பு வாய்ந்த குடிமக்களின் பங்கினைக் குறித்த சென்னை பள்ளி மாணவர் ஒருவரின் உரையும் இடம்பெறும்.
இதே போல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய வாக்காளர் தினத்திற்கான உறுதிமொழியினை வாக்காளர்களை ஏற்கச் செய்வதொடு புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையினை வழங்கிடவும் உள்ளார்கள். அதே போன்று ஒவ்வொரு வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வாக்காளர்கள் உறுதிமொழியினை ஏற்பதோடு புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கிடவும் உள்ளது.
இதை அந்த வாக்குச்சாவடி பகுதியில் உள்ள மற்ற தகுதியுள்ள வாக்காளர்களுக்கு கடமையுணர்வுடன் ஜனநாயகத்தை வலிமையடையச் செய்ய அவர்களின் சிறந்த பங்கேற்ப்பை வழங்கிட உந்து சக்தியாக விளங்கும். பல்வேறு சமூக அமைப்புகள், அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள், பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஆகியவை தேசிய வாக்காளர் தினத்தினை சிறப்பாக கொண்டாடுவதற்காக முழுமையான ஆதரவினை நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்:
தலைமைத் தேர்தல் அதிகாரி,
தமிழ்நாடு.
No comments:
Post a Comment